கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டார். கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சேர்ப்பதற்காக அழைப்பு விடுப்பது குறித்து சரத்குமார், கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா மாவட்ட நிர்வாகிகளுடன் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தேமுதிகவுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்தது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். அத்துடன், கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்றும் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.