கள்ளக்குறிச்சியில் பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டதாக கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் மற்றும் சங்கராபுரம் அருகேயுள்ள புத்திராம்பட்டு கிராமங்களில் 2 ஆண்டுகளுக்கு முன் குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருவதாக கூறி குடிசை வீட்டின் முன்பாக நிறுத்தி புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.
ஆனால் இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் ஓரு வீடு கூட கட்டித்தரப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிராமத்து இளைஞர்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான இணையதளத்தில் சென்று பார்த்த போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டி தரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருநதது. கட்டப்படாத வீட்டை கட்டியதாக கணக்கு காட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது திருநாவலூர் பகுதியில் மட்டும் 97 வீடுகள் இன்னும் கட்டாமலே உள்ளதாகவும், அவர்களுக்கான முதற்கட்ட தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான் என்று குறிப்பிட்ட அலுவலர், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.