தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும் என மீண்டும் அதிமுகவில் இணைந்த கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய பாஜகவை, விமர்சித்திருந்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்த கே.சி.பழனிசாமி, அதிமுக கட்சிப் பதவி விவகாரம் குறித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவில் அவர் மீண்டும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து கே.சி.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “காலங்கள் மாறும் போது கட்சிகளின் தலைமைகள் மாறலாம். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். அதுகுறித்த வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது. தேர்தல் வரும்போது நான் திமுகவுடன் சேர முடியாது. அதிமுகவுக்குத்தான் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று இணைந்துள்ளேன். தேர்தல் காலத்தில் மனவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும். அதிமுக வெற்றிக்காக பணியாற்ற வேண்டியது அனைவரின் கடமை. காவேரி பிரச்னையில் கருத்து சொன்னதற்காகவே நீக்கப்பட்டேன்” எனத் தெரிவித்தார்.