கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து எழுதிய பத்திரிக்கையாளருக்கு, கோவா சட்டசபை வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனோகர் பாரிக்கரை மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ், மகராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை காரணமாக கோவா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்களாக குறைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் பாதி வரை நடத்துவதாக திட்டமிடப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், ஹரிஸ் வோல்வொய்கர் என்ற பத்திரிக்கையாளர் சட்டசபை வளாகத்திற்குள் நுழைய பாதுகாவலர் அனுமதிக்கவில்லை. வோல்வொய்கர் ஆன்லைன் செய்தி இணையதளத்தை நடத்தி வருகிறார். இதுகுறித்து வோல்வொய்கர் கூறுகையில், ‘என்னிடம் உள்ளே செல்வதற்கான நுழைவு பாஸ் உள்ளது. கடந்த சில வருடங்களாக நான் வந்து செல்கிறேன்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக கோவா சட்டசபை சபாநாயகரிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
வோல்வொய்கர் தனது இணையதளத்தில் மனோகர் பாரிக்கரின் உடல்நலம் குறித்து கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தார். பின்னர் அந்த செய்தியை எடுத்துவிட்டார்.