ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
அபுதாபியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 99 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
99 ரன்களில் அவுட்டானதால் ஏமாற்றமடைந்த கெயில் தன்னுடைய பேட்டை தூக்கி வீசினார். பின்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு கை குலுக்கிவிட்டு சென்றார். பின்பு பேசிய கெயில் "“180 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட் விளையாட நன்றாக உள்ளது. இரவில் விளையாட சூப்பராக இருக்கும். 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான்" என்றார்.
இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் எப்போதோ போட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. 2013 இல் ஆர்ச்சர் போட்டி ட்வீட்டில் "நான் பவுலிங் போட்டிருந்தால் அவரை 100 ரன்களை எடுத்திருக்க விடமாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். பின்பு 2016 இல் "கிறிஸ் கெயில் அவர்களே சதம் அடிக்க நினைத்து உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
ஜோப்ரா ஆர்ச்சரின் இதற்கு முந்தைய ட்வீட்டுகள் கூட மிகவும் பிரபலம். அதாவது கிரிக்கெட்டில் நடக்கும் பல விஷயங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.