ஜெ.தீபா அணியின் மதுரை மாவட்டத்தின் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் மாவட்டத்தில் ஜெ.தீபா அணியை கலைத்து விட்டதாகவும் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் தீபா வீட்டில் குவிந்த தொண்டர்கள் அரசியலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற தீபா அரசியலில் இறங்கினார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று தொடங்கப்பட்ட இயக்கம் பின்னர் அ.தி.மு.க.ஜெ.தீபா அணியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாநகர் ஜெ.தீபா அணியின் மாவட்ட செயலாளரார் கார்த்திகேயன் தனது பதவியை ராஜினாமா செய்து, மதுரையில் கட்சியையும் கலைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபா அணியில் மாவட்ட நிர்வாகிகள் பதவி கேட்பவர்களிடம் ரூ.2 லட்சம், பகுதிச் செயலாளர் பதவி கேட்பவர்களிடம் ரூ.1 லட்சம், வட்டச் செயலாளர் பதவி கேட்பவர்களிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுங்கள் என தலைமை கட்டளை இட்டுள்ளது. இந்த கட்டளயை என்னால் நிறைவேற்ற முடியாது. பணம் வசூல் செய்து கொடுத்தும், ஆட்களை கூட்டிச்சென்று விட்டும் பதவியில் நீட்டிக்க நான் விரும்பவில்லை. ஆதலால் நான் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். அத்தோடு மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. ஜெ.தீபா அணியும் கலைக்கப்படுகிறது. புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசிகளாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்