ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து, அவரது அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தங்கள் பாட்டி சந்தியா தான் போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையம் உள்ளிட்ட பல சொத்துக்களை வாங்கியதாகவும், அந்த வீட்டில் தான் தனது அத்தை ஜெயலலிதா மற்றும் தந்தை ஜெயக்குமார் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் எந்த உயிலும் எழுதி வைக்காததால் அந்தச் சொத்துக்களுக்கு தானும் தனது சகோதரர் தீபக்கும்தான் சட்டப்பூர்வ வாரிசு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தீபா தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, அரசு தரப்பில் பதிலளிக்குமாறு கூறினார். இதையடுத்து வழக்கு குறித்து பதிலளிக்க அரசு தரப்பில் ஒருவாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதி, ஒருவாரத்திற்குப் பிறகு வழக்கு விசாரணையின்போது, தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.