கடந்த ஒராண்டாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகம் முழுவதும் மக்கள்நலப் பணிகள் தேங்கியுள்ளதாகவும், மீனவர் பிரச்னை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமாரை சூப்பர் டூப்பர் முதலமைச்சர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இன்று ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகள், உயர்மின்னழுத்த கம்பிகள் தரையில் புதைக்கப்பட்டிருப்பது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் குடிநீர்த்தொட்டி, கழிவறை உள்ளிட்டவைகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மீனவர் பிரச்னை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமாரை சூப்பர் டூப்பர் முதலமைச்சர் என்று விமர்சித்தார்.