பணி கலாசாரத்திற்கென உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் ஜப்பானில் குடிமைப்பணி அதிகாரி ஒருவருக்கு லட்சக் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பணி நேரத்தில் அதிகமுறை புகைப்பிடிக்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதாம்.
61 வயதாகும் அந்த குறிப்பிட்ட நபர் தன்னுடைய 14 ஆண்டுகால பணி அனுபவத்தில் கிட்டத்தட்ட 4,500 முறைக்கு மேல் புகைப்பிடிப்பதற்காக வேலை நேரத்தின் போது இடைவேளை எடுத்திருப்பதாக அவர் மீது 9 லட்சம் ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக அவரது சம்பளத்தில் இருந்து அடுத்த 6 மாதத்திற்கு 10 சதவிகித ஊதியமும் இதற்கு தண்டனையாக பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானின் ஒசாகா மாகாண அரசு அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இது குறித்த ஜப்பான் நாட்டு ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளதன் விவரத்தை காணலாம்:
தண்டனைக்குட்பட்ட அந்த குடிமைப்பணி அதிகாரி தனது 14 ஆண்டுகால பணி நேரத்தில் 355 மணிநேரம் 19 நிமிடங்கள் புகைப்பிடிக்க நேரம் செலவிட்டிருக்கிறாராம். இதனையறிந்த ஒசாகா அரசு அலுவலக நிர்வாகத்தின் மனிதவளத்துறையினர் சம்பந்த அதிகாரியுடன் சேர்த்து மற்ற இருவரையும் விசாரித்து எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள்.
இருப்பினும் அந்த மூத்த அதிகாரி உட்பட மூவரும் அதனை பின்பற்றாமல் வழக்கம்போல அலுவலக நேரத்தில் புகைப்பிடிப்பதையே தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இதனால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கையை எடுக்க முற்பட்டு அது செயல்படுத்தப்பட்டும் இருக்கிறது.
சட்ட நடவடிக்கைக்கு பின்னணி என்ன?
ஒசாகா மாகாணத்தில் உள்ள எந்த அரசு அலுவலகம் மற்றும் அரசு கல்வி நிலையங்களில் புகைப்பிடிக்க கூடாது என கடந்த 2008ம் ஆண்டே தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து 2008ல் அறிவித்த உத்தரவின் நீட்சியாக கடந்த 2019ம் ஆண்டு அனைத்து அரசு அலுவலக ஊழியர்களும் பணி நேரத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பேரிலேயே குடிமைப்பணி அதிகாரி உள்ளிட்ட மூவர் மீதும் ஒசாகா மாகாண அரசு அலுவலக நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.