ஜப்பான் நாடாளுமன்றம் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவிக்க உள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையிலும், எதிர்க்கட்சிகள் வலுவிழந்து உள்ளதாலும், தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர் தேர்தலை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அபேயின் கூட்டணிக் கட்சியான கோமியிட்டோவின் தலைவர் நட்டுவோ யமகுச்சி கூறுகையில், வரும் அக்டோபர் 22 ஆம் தேதி நாடாளுமன்ற கீழவைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே வட கொரியாவின் தொடர் அணு ஆயுதச் சோதனைகளால் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில் ஜப்பான் பிரதமரின் அறிவிப்பு, அவர் எதிர்பாராத விளைவுகளைத் தரக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.