பாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால், ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோப்புகளில் கையெழுத்திட்ட பின்னரே பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்போம்.
இன்றுதான் முதல்முறையாக பிரதமரை சந்தித்தேன். கடவுளின் கருணையினால் அடுத்த 5 நாட்களில் 30, 40, 50 முறை சந்திப்பேன். சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நினைவு படுத்துவேன். தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தும் போது நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும்
நான் யாருக்கும் எதிராகவும் செயல்படமாட்டேன், மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை. ஓராண்டிற்குள் ஆந்திராவை நாட்டின் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். வரும் காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும்.” என்று ஜெகன் மோகன் தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி சென்ற ஜெகன் மோகன் ரெட்டி மே 30ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்கு விழாவில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.