தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் எழுந்த நிற்காத சர்ச்சையில் ஜெ.தீபாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று , தியானம் செய்யவதற்கான இடம் பொது மேடை இல்லை. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும், தியானம் கலைப்பீராக...” என தெரிவித்துள்ளார்.