அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ?

அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ?
அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ?
Published on

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இருப்பினும் இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என்ற கருத்தாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு இருந்தது. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தமிழக அரசின் கோரிக்கை தான் என தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது எனவும் திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்கும் கூட, ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டிசம்பர் 3 ஆம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியிருந்ததாகவும்
அதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பதிலில் திருவாரூர் உட்பட 5 மாவட்டங்கள் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தது. இதையடுத்துதான் தேர்தல் ஆணையம் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன. இடைத்தேர்தல் வேண்டாம் என
டிசம்பர் 3 ஆம் தேதியே தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில் அதை பரிசீலிக்காமல் டிசம்பர் 31 ஆம் தேதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்போது கிரிஜா வைத்தியநாதனின் கடிதம் ஞாபகம் வரவில்லையா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது. 

நீதிபதிகள் கேட்டபோது கஜா புயல் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படாது என எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது? தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் மாநில அரசை தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்ததா? புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப 3 மாதம் ஆகும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் புறந்தள்ளியதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன.

ஏற்கெனவே தமிழக அரசு கேட்டுக்கொண்ட கோரிக்கையை நிராகரித்து விட்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஏன்?. ஆனால் பின்னர், வழக்குகள், கோரிக்கைகள் வலுப்பெற்றதும் கருத்து கேட்பு கூட்டம் என்று நடத்தி தேர்தலை ரத்து செய்வது ஏன்? 

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் தமிழக அரசின் கோரிக்கையையும், உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தையும் ஜனநாயகத்தின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும் சாதாரண வாக்காளர் வேட்பாளராக களமிறங்குவதற்கான நம்பகத்தன்மையையும் தேர்தல் ஆணையம் குறைத்து கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். நாங்கள் நினைத்தால் தேர்தல் நடத்துவோம், நாங்கள் நினைத்தால் தேர்தலை ரத்து செய்வோம் என்ற அலட்சிய போக்குடனும் அதிகாரப்போக்குடனும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட வேண்டும் எனவும் இதனால் மட்டும்தான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com