உடல் எடையை குறைக்க 16:8 டயட்: டாக்டர் டிப்ஸ்!

உடல் எடையை குறைக்க 16:8 டயட்: டாக்டர் டிப்ஸ்!
உடல் எடையை குறைக்க 16:8 டயட்: டாக்டர் டிப்ஸ்!
Published on

INTERMITTENT FASTING எனப்படும் டயட் முறை  மூலம் உடல் எடையை குறைப்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் அரவிந்தராஜ்.

''தென்னிந்தியர்களின் உணவுபழக்கம் என்பது மிக எளிது. காலையில் டிபன், மதியம் அரிசி சாதம், இரவு டின்னர், நடுவில் டீ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை உள்ளடக்கியதே நமது அன்றாட உணவு முறை.

நாம் உண்ணும் தென்னிந்திய உணவுகளில் அதிகம் இருப்பது கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து). இந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்; இன்சுலின் மிக அதிக அளவில் சுரக்கும்; அதிக அளவு உருவான சர்க்கரை Triglyceride என்னும் கெட்ட கொழுப்பாக படிந்து தொப்பையாக மாறும்; உடல் எடை கூடும்.

மூன்று வேளை உணவு, மூன்று வேளை நொறுக்குத்தீனி எடுத்துக்கொண்டே இருப்பதால், இன்சுலின் சுரப்பும், அதன் பீட்டா செல்களும் பழுதடைந்து நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியும் வந்து சேரும்.

ஆக, உண்ணாவிரத முறை தான் எளிதில் எடை குறைய மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரசெய்யும் மாபெரும் யுக்தி.

உண்ணாவிரத முறை 16:8 என்ற முறையில் கடைபிடிக்கப்படுகிறது.

அதென்ன 16:8?

16 மணி நேரம் - நிறைய தண்ணீர், உப்பிட்ட லெமன் ஜீஸ் மட்டும் பருகுவது

8 மணி நேரம் - குறைமாவு, நிறை கொழுப்பு மற்றும் நிறை புரத உணவுகளை எடுத்துக்கொள்வது.

இந்த 16:8 உணவுமுறையை தொடங்குவது எப்படி?

இதை இரவு 8 மணிக்கு தொடங்கவும். இரவு 8 மணிக்கு உங்களுடைய முதல் உணவை எடுக்கவேண்டும்.

நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் மாவுச்சத்து 50 கிராமுக்கு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவான சிக்கன், மட்டன், முட்டை, பாதாம், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவை எடுத்த்துக்கொள்ளலாம். சமையல் எண்ணெயாக நெய் / வெண்ணெய் / தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சாப்பிட்டு நீங்கள் தூங்கி விடுங்கள். அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு உங்கள் இரண்டாவது குறைமாவு உணவை உண்ணுங்கள்.

அதற்கு இடைப்பட்ட 16 மணிநேர காலம் தான் உங்களுடைய உண்ணாவிரத சமயம்.

அந்த 16 மணி நேரத்தில் நீங்கள் நிறைய நீர் பருக வேண்டும்; உப்பிட்ட லெமன் ஜீஸ், உப்பிட்ட பிளாக் காபி, க்ரீன் டீ, மல்டி விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

இப்படியாக 8 மணி நேரத்தில் குறைவான மாவுச்சத்து உணவு உண்டு, 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் உங்கள் உடலில் சேமிக்கப்பட்டு வைத்துள்ள கெட்ட கொழுப்புகள் எரியும். இதன் மூலம் உடல் எடை குறையும். இன்சுலின் அதிகம் தூண்டப்படாததால் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

மேலும், விரதமுறை மூலம் 'Autophagy' எனப்படும் செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்கும் முறை செயல்பட்டு சரும பளபளப்பு, நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவையும் ஏற்படும்.

உடல் எடை குறைக்க விரும்புவோர் இந்த உண்ணாவிரத முறையை பின்பற்றி எடை குறைந்து ஆரோக்கியம் பெறலாம்’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com