ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீராங்கனை யாஷாஸ்வி தேஸ்வால் பதக்கத்தைக் குறிவைத்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிப்பிரிவிலும் அணிப் பிரிவிலும் அசத்தக் காத்திருக்கிறார் யாஷாஸ்வினி தேஸ்வால். 24 வயதாகும் யாஷாஸ்வினி தேஸ்வால் டெல்லியை சேர்ந்தவர். துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மீதான ஆர்வம் யாஷாஸ்வினி தேஸ்வாலுக்கு 15 வயதில் தொடங்கியது.
17 வயதில் சர்வதேச போட்டிகளில் சாதிக்கத் தொடங்கினார் யாஷாஸ்வினி தேஸ்வால். படிப்படியாக திறமையை வளர்த்த அவர் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்பின்னர் சீனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர், ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றிருக்கிறார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களையும் வென்று சர்வதேச அளவில் அவர் சாதித்திருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் யாஷாஸ்வினி தேஸ்வால். பயிற்சியாளர் தில்லானின் ஆலோசனையுடன் தில்லாக பயிற்சியெடுத்து வருகிறார்.