“செம்மலை முதல் டிடிவி.தினகரன் வரை” தமிழக தேர்தல் வரலாற்றில் சுயேட்சையாக வாகை சூடியவர்கள்!

 “செம்மலை முதல் டிடிவி.தினகரன் வரை” தமிழக தேர்தல் வரலாற்றில் சுயேட்சையாக வாகை சூடியவர்கள்!
 “செம்மலை முதல் டிடிவி.தினகரன் வரை” தமிழக தேர்தல் வரலாற்றில் சுயேட்சையாக வாகை சூடியவர்கள்!
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆரம்பக்கட்டத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றனர். ஆனால், திமுக, அதிமுக பிரதான கட்சிகளாக உருவெடுத்தபிறகு, சுயேச்சைகள் தேர்தலில் வெற்றி பெறுவது அரிதானது. அதிலும் சிலர் விதிவிலக்காக தங்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த சுயேச்சைகள்

தாரமங்கலம் – செம்மலை : 1980 தேர்தலில் சேலம் தாரமங்கலம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட எஸ்.செம்மலை வெற்றி.

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் தாரமங்கலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.நாராயணன் என்பவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தேர்தல் வெற்றிக்குப் பின் செம்மலையை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து 1984-ல் நடைபெற்ற தேர்தலில், அதே தாரமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார் செம்மலை.

ஸ்ரீவில்லிபுத்தூர் – தாமரைக்கனி :

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பால்கோவா, அடுத்து நினைவுக்கு வருவது, கை அகலத்துக்கு மோதிரம் அணியும் அரசியல்வாதி தாமரைக்கனி. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி, 1977 தேர்தலில் போட்டியிட்டபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் தாமரைக்கனி. 1980, 1984 தேர்தல்களில் மீண்டும் வென்ற அவர், 1989 தேர்தலில் ஜானகி அணி சார்பில் நின்று தோல்வியடைந்தார். 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால், அதிமுக -காங்கிரஸ் அணிக்கு சாதகமான அலை வீசியது. எனினும், ஸ்ரீவில்லிபுத்தூரில் சுயேச்சையாக களம்கண்ட தாமரைக்கனி சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார். மீண்டும் அதிமுகவில் இணைந்த தாமரைக்கனி, 1996-ல் மீண்டும் வெற்றிபெற்றார். அதிமுக சார்பில் பேரவைக்குச் சென்ற 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் தாமரைக்கனியும் ஒருவர்.

ராதாபுரம் - மு.அப்பாவு :

2001 ஆம் ஆண்டு தேர்தலில் புவனகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், சுயேச்சையாக போட்டியிட்ட அருள் என்பவருக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இதேபோல அதிமுக கூட்டணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதி, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மு.அப்பாவு, தமாகாவிலிருந்து விலகி சுயேச்சையாக களம் இறங்கினார். சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அப்பாவு பின்னர் திமுகவில் இணைந்தார்.

ஆர்.கே.நகர் டிடிவி.தினகரன் :

பொதுத்தேர்தல்களில் சுயேச்சைகள் வெல்வது அரிதாக இருக்கும் காலத்தில், இடைத்தேர்தலில் வென்ற முதல் சுயேச்சை வேட்பாளர் என சாதனை படைத்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com