இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. மறுபுறம், காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் நேற்று காலை திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்டாயமாக 2 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலான 5 பேர் கொண்ட மதிமுக குழு முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின்போது திமுக கூட்டணியில் 3 மக்களவை தொகுதிகளை ஒதுக்குமாறு மதிமுக கேட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுக பொருளாளர் துரைமுருன் தலைமையிலான திமுக குழுவுடன், திருமாவளவன் தலைமையிலான விசிக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை வழங்குமாறு விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கோரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
தொகுதி பட்டியலை திமுகவிடம் அளித்துள்ளோம் எனவும் விரைவில் அவர்கள் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும் எங்களுடைய சொந்த சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம் எனவும் காதர் மொய்தீன் தெரிவித்தார்.