“வெறிச்சோடிப்போன சித்ரகொண்டா, மதிலி வாக்குச்சாவடிகள்” - மாவோயிஸ்ட் பதட்டம்
இந்தியாவில் பலத்த பாதுகாப்புடன் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை பீகாரில் 50.26%, மேகாலயாவில் 62%, லட்சத்தீவுகளில் 65.9%, தெலங்கானா 60.57%, உத்தரபிரதேசம் 59.77%, மணிப்பூர் 78.20%, அஸ்ஸாமில் 68% என வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒடிசா:
ஒடிசா மாநிலத்தில் மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள சித்ரகொண்டா பகுதியிலிருந்த 6 வாக்குச்சாவடிகளில் இதுவரை யாரும் வாக்களிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதே மாவட்டத்திலுள்ள மதிலி பகுதியிலிருந்த 9 வாக்குச்சாவடிகளிலும் இதுவரை யாரும் வாக்களிக்கவில்லை. இதற்கு அம்மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற பயமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
ஒடிசாவிலுள்ள காலஹண்டியின் பேஜிபடார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கிராமத்திற்கு முறையான சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதற்காக இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலை புறக்கணித்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கரில் கடந்த 9 ஆம் தேதி நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் சிக்கி பாஜக எம்.எல்.ஏ மற்றும் 4 காவலர்கள் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது. ஆனால் நக்சல்கள் தாக்குதல் நடத்திய தாண்டேவாடா பகுதியில் போலீசாரின் பலத்த பாதுகாப்பினால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைரானாவிலுள்ள வாக்குச்சாவடியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சிஆர்பிஎஃப் வீரரால் அப்பகுதி சிறிது நேரம் கலவர பூமியானது. அதே மாநிலத்தில் பிஜ்னாரில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த நபர் அங்கிருந்த அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதனையடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.