இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், வன விலங்குகள் சம்பந்தமான சுவாரஸ்ய அல்லது வித்தியாசமான வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். இந்த வீடியோக்கள் எப்போதும் வைரலாகுவது மட்டுமின்றி, சில நேரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். இந்நிலையில், இன்று காலை அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நம் மனதை பதறவைக்கும் வகையில் உள்ளது.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலை ஓரத்தில் இரவு நேரங்களில் லாரிகள் நிறுத்தும் நிலையமா அல்லது ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடமா என்று சரியாக தெரியவில்லை. திறந்தவெளியில் லாரிகளுக்கு அருகில் பழைய பொருட்களுக்கு இடையே போடப்பட்ட கட்டிலில் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் சிறிது இடைவெளியில் நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருக்கிறது.
அப்போது எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று, அவர்களுக்கு பின்னாடியிலிருந்து பதுங்கி பதுங்கி வந்து மெதுவாக நாயின் மீது பாய்கிறது. பின்னர் அந்த சிறுத்தை, நாயின் கழுத்தை அப்படியே கவ்விக்கொண்டு அங்கிருந்து பாய்ந்து ஓடிவிட்டது. நாயின் கூச்சல் கேட்டு, தூங்கிக்கொண்டிருந்த அந்த நபர், கண்விழித்து அதிர்ச்சியுடன் பார்க்கிறார். அதன்பிறகு என்ன நடந்து என்பது தெரியவில்லை.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், “சிறுத்தையின் திருட்டுத்தனத்தையும், சுறுசுறுப்பையும் பாருங்கள். என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் நாய் தூங்கிக் கொண்டிருக்கிறது. பரபரப்பான புனே-நாசிக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் சிறுத்தை செயலைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக நாய்கள் இருப்பதால், காலனி ஆதிக்க காலத்தில் நாய்களை பாதுகாக்க, அதன் கழுத்தில் அலுமினியத்தால் ஆன கவசங்களை அணிவித்து மக்கள் பாதுகாத்து வந்த தகவல்களையும் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ‘நாய்க்கு சிறு அபாயத்தையும் உணரும் சக்தி இருந்தும் எப்படி எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இருந்தது’ எனவும், ‘கட்டிலில் படுத்து தூங்கிய அந்த நபர் இனிமேல் இப்படி வெளியில் தூங்கமாட்டார்; இதனை நினைத்து பல இரவுகள் தூக்கமில்லாமல் தவிக்கவும் வாய்ப்புண்டு’ எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.