எங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தால் ஒரே வாரத்தில் அதிமுகவின் 10 எம்.எல்.ஏக்களை இழுத்துவிட முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை மெஜாரிட்டி இல்லாத ஆட்சி என கூறும் ஸ்டாலினால் அதனை கவிழ்க்க முடியவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆற்காடு வீராசாமி, “ஸ்டாலின், தான் நினைத்தால் ஒரு ஆட்சியை அகற்ற முடியும் என நம்புவது தவறு. ஒரு ஆட்சி மக்களாலே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒருவரை ஆட்சியில் உட்கார வைப்பதோ அல்லது அகற்றுவதோ அது மக்கள் கையில் தான் உள்ளது. தனிப்பட்ட யார் கையில் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. எப்பொழுது பெரும்பான்மை இல்லையோ, அப்போது அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று நினைக்கவில்லை. 5 ஆண்டு முழுமையாக ஆட்சியில் என எடப்பாடி பழனிசாமியால் கூட சொல்ல முடியாது.
அதிமுகவிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நினைத்தால் எப்படி ஆட்சி நீடிக்க முடியும். எங்களுக்கு பண வசதி இருந்தால் அதனை செய்து காட்ட தயாராக இருக்கிறோம். பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜனநாயகத்திற்கு விரோதமாக அது இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு. தற்போதையை அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த பக்கத்தில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் இழுத்தாலோ அல்லது அந்தக் கட்சியை விட்டு பிரித்தாலும் ஆட்சி கவிழும். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
ஒரு வாதத்திற்காக வைத்து கொள்வோம், ரூ.10 கோடி கொடுத்தால் ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால் 10 எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. ஆனால், அந்த ரூ100 கோடி எங்கு இருக்கிறது?. அப்படி இருந்தால் நிச்சயம் செய்து நான் காட்டுவேன். எம்.எல்.ஏக்களை இழுக்காமல் இருப்பதற்கு காரணம், ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நாம் இன்று அப்படி செய்தால், நாளைக்கு அவர்கள் அதேபோல் செய்யக்கூடும் என்று நினைக்கிறார்” என்றார்.
ஆற்காடு வீராசாமியின் விரிவான பேட்டியை கீழேவுள்ள வீடியோவில் காணவும்..