தற்போது உள்ள அரசியல் சூழலில், ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பலமுறை அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான செய்தியும் வெளியாகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், “ வரும் 31 ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து தெரிவிக்கப்படும் என்று ரஜினி கூறியிருப்பத்தில் தெளிவும், உறுதியும் இருக்கிறது. பாஜகவை பொருத்த வரையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். ரஜினி எனக்கு அரசியல் புதிதல்ல என்று கூறியிருக்கிறார். அதனால் தான் ரஜினியோடு, மற்ற நடிகர்களை ஒப்பிட்டு பார்த்தால், இதற்கு முன்பே பல அரசியல் நிகழ்வுகளில் கருத்து சொல்பவராகவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பவராகவும் ரஜினி இருந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
எனவே, தற்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கது என்று தமிழிசை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ பல முறைகள் ரஜினியின் அரசியல் குறித்து அறிவிப்புகள், தகவல்கள் வந்தாலும், இந்த முறை ரஜினி கண்டிப்பாக அரசியல் குறித்து அறிவிப்பார் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து ஊழலை விரட்ட அதிகப்படியான பலம் தேவைப்படுகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற ஆர்கேநகர் இடைத்தேர்தல், பணம் கொடுத்துவிட்டு வெற்றி பெற்று விடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது. எனவே, ஊழலுக்கு எதிராக அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக வரவேற்கும்” என்றும் கூறியுள்ளார்.