"திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றிபெற்றால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வருவது உறுதி" பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் அருகிலுள்ள டி.தேவனூரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “திமுகவை சேர்ந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவும், தாய்மையை போற்றும் பெண்கள் பற்றி இழிவாகவும் பேசிவருகின்றனர். முதல்வர் தாயார் பற்றியும் இழிவாக பேசி இருக்கின்றனர். இது கண்டிக்கதக்க செயல் ஆகும்.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கு, செம்மண் குவாரி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும். இதில், பொன்முடி நிச்சயம் தண்டனை பெறுவார். அவ்வாறு தண்டணை பெற்றால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வருவது உறுதி” என தெரிவித்தார்.
மேலும், “திமுகவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கும், பாஜகவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமான வரித்துறை என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். ஏன் அதிமுக பிரமுகர்கள், அதிமுக அமைச்சர்களின் உறவினர்கள், இதர கட்சியினர் வீடுகளிலும் தான் சோதனை நடத்துகின்றனர். இதில் திமுக ஒன்றும் விதி விலக்கல்ல” என்றார் அவர்.