இதுவரை சினிமா ஸ்டார்; இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன்: கமல்ஹாசன் பேச்சு

இதுவரை சினிமா ஸ்டார்; இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன்: கமல்ஹாசன் பேச்சு

இதுவரை சினிமா ஸ்டார்; இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன்: கமல்ஹாசன் பேச்சு
Published on

மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் இபிஎஸ், ஸ்டாலின் இருவருமே ஊழல் செய்யவில்லை என்று மறுக்கவில்லை  என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் ரவிச்சந்திரன், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சியின் சீர்காழி வேட்பாளர் பிரபு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பூம்புகார் வேட்பாளர் மெகராஜ்தீன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது...

" தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அடுத்த தலைமுறையினராவது நன்றாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதுமே வெறும் குறைகளாக இருக்கின்ற அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் பழனிசாமி 10 லட்சம் கோடி ஊழல் செய்தாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் 20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழனிசாமி கூறுகிறார். மாறிமாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர தவறு செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. இதனால் 30 லட்சம் கோடி, மக்கள் வரிப்பணம்தான் காணாமல் போய் உள்ளது.

ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும் சிறையில் இருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. தலைமையில் இருந்து நேர்மையாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா என்று கேட்கிறார்கள். ஆம் நீங்கள் கொடுத்ததுதான். நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது.

நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டிற்கு 300 கோடி நஷ்டம்தான். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்துதான் அரசியலுக்கு வந்தேன். இதுவரை சினிமா நட்சத்திரமாக இருந்த நான் இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன். ஊர் போற்றும் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். நல்ல தலைவராக இருப்பதோடு நல்ல மனிதராக இருந்தால் மக்கள் நம்மை தலைவராக மாற்றுவார்கள்.

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிகொண்டு வருவேன். அதனால் நான் அந்த கட்சியை சேர்ந்தவர் இந்த கட்சியை சேர்ந்தவர் என்று நினைத்துவிடார்கள். யார் நல்லவர்களாக இருந்தார்களோ அவர்களை முன்னுதாரணமாக நான் எடுத்துக்கொள்வேன். காந்தி கட்சிக்கு அப்பாற்பட்ட எனது தலைவர்.

தமிழக இளைஞர்கள் வேலை தேடும் பட்டதாரிகளாக இல்லாமல் வேலை கொடுக்கும் முதலாளிகளாக உருவாக வேண்டும். மக்களுக்கு இலவசங்களை அறிவித்து கொடுப்பது ஏமாற்றுவேலை. மக்களிடம் கொடுங்கோல் வரி போட்டும், டாஸ்மாக் கடைமூலம் வரும் பணத்தை கொண்டுதான் இலவசங்கள் வழங்குகின்றனர். சாராயம் விற்பது அரசின் முக்கிய பணியல்ல.

திருடாத நல்ல தலைவர்கள் இருந்தால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் லாபகரமாக இயங்கும். மக்களால் தகர்க்க முடியாத கோட்டை என்று எதுவுமில்லை. ஜனநாயகம் கோட்டையல்ல. மக்கள் வாழும் இடம். மக்கள் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.

கிராமசபை கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட் கேட்கும். இங்கு வந்துள்ளதுபோல் மக்கள் கிராமசபை கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினால் உங்கள் பகுதி நிச்சயமாக வளர்ச்சி அடையும். தமிழகத்தில் ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி அமைவதற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com