கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று நோயாளிகளுடன் உரையாடிய ஒரே அமைச்சர் நான்தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நவம் பட்டி, ஜீவாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குசேகரிப்பின் போது பேசிய அவர், “நான் பத்தாண்டு காலம் இந்த விராலிமலை மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்துள்ளேன். இந்த பகுதி மக்களுக்கு எந்தவித தீங்கையும் செய்யவில்லை, என்னால் இம்மக்களுக்கு எந்த இடையூறும் வந்ததில்லை. இலுப்பூர் தெருவீதிகளில் செல்லும் போது, ஓட்டுநரை ஹாரன் அடிக்காமல் மெதுவாக செல்ல சொல்லியிருக்கிறேன்.
எனக்காக பிரச்சாரம் செய்த எனது ஒன்பது வயது மகளைக் கூட பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். அந்த அளவிற்கு எனக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அந்த நெருக்கடி எல்லாம் தாண்டி விராலிமலை மக்களுக்காக தொடர்ந்து நான் உழைப்பேன்.
கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடிய ஒரே சுகாதாரத்துறை அமைச்சர் நான்தான். அதற்கெல்லாம் காரணம் விராலிமலை மக்கள் அளித்த வாக்குதான். இந்த தேர்தலிலும் விராலிமலை தொகுதி மக்கள் அனைவரும் தனக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று பேசினார்.