போயஸ் கார்டனில் இருந்து அடித்து வெளியே துரத்தப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு அவரது அண்ணன் மகள் தீபா இன்று சென்றார். அப்போது அவரை உள்ளே விடாமல் டிடிவி தினகரன் தரப்பு தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தீபா ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்னர். இதனால் போயஸ் கார்டன் பரபரப்பானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, கார்டனில் இருக்கும் தீபக்கின் அழைப்பின் பேரில் போயஸ் கார்டன் வந்தேன். ஆனால் போயஸ் கார்டனில் என்னையும், என் கணவரையும் பாதுகாவலர்கள் தாக்கினார். சசிகலா குடும்பத்தினருடன் சேர்ந்து தீபக் சூழ்ச்சி செய்கிறார். திட்டமிட்டே வரவழைக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டேன். தப்பித்து நாங்கள் வெளியே வரக் காரணமே செய்தியாளர்கள் தான். செய்தியாளர்களையும் பாதுகாவலர்கள் தாக்கினர். பணத்திற்காக சசிகலாவுடன் சேர்ந்து ஏற்கனவே தீபக் ஜெயலலிதாவை கொன்றுவிட்டார். இப்போது என்னை கொல்ல முயற்சி செய்கின்றனர். எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்கியவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பிரதமரிடம் இப்பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டுள்ளேன். சொத்து தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன் என்றும் தெரிவித்தார்.