அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு என்ன வித்தை தெரியுமோ, அதை விட 100 மடங்கு வித்தை தெரிந்தவன் தான் என்று சாத்தூர் எம்.எல்.ஏவும் அமமுக வேட்பாளருமான ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தை அடுத்த சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பாக எம்.எல்.ஏ ராஜவர்மன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் இன்று பிற்பகலில் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆசிலாபுரம் பகுதியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றவாறு ராஜவர்மன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், “பல்வேறு எம்எல்ஏ-க்கள் ஆதரவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, தற்போது பலருக்கு சீட் தர மறுக்கிறார். அவரை ஆட்சியை விட்டு இறக்குவது உறுதி. அதிமுகவினர் விசுவாசத்தை பற்றி பேச தகுதியற்றவர்கள். தமிழகத்தில் துரோகம் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. விசுவாசம் வீழ்ந்ததாக வரலாறும் கிடையாது. சாத்தூர் தொகுதி மக்கள் அதிமுகவினருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
அருகே உள்ள ராஜபாளையம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை பிரித்தாளுவார். அவருக்கு இந்த இயக்கத்தை அடகு வைக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள சமூகங்களை அவர் நசுக்குகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் அளிப்பது வேஸ்ட் என பத்திரிகைகளில் பேட்டி அளிக்கிறார். அவரை புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு மக்கள் தள்ளுவார்கள். அமமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அனைத்து வாக்காளர்களும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதல்வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னம் வெற்றி பெற்றால் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவார்கள்.
அங்குள்ள அனைத்து அதிமுகவினரும் அமைதியாக உள்ளார்கள். என்னிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். அமைச்சருக்கு என்ன வித்தை தெரியுமோ, அதைவிட எனக்கு 100 மடங்கு தெரியும்” என்றார்.