போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரான பரமக்குடி அடுத்த தெளிச்சநல்லூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்ப உறுப்பினர்களான சாருஹாசன், சுகாசினி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், மற்றும் நடிகர் பிரபு, சினேகன், ஞானசம்பந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நட்டு, மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தந்தை சீனிவாசனின் உருவ சிலையை திறந்து வைத்து பேசிய கமல்ஹாசன், மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நிகழும் நிலை ஏற்பட்டதால்தான், தாம் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிலகத்தையும் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். அதன் மூலம் பணித்திறனை பட்டதாரிகள் வளர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.