'மற்ற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன்' என கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கீதா. இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "தமிழக முதல்வரையும், போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரையும் முழுமையாக நம்பி இருந்தேன். கடைசி நேரத்தில் எனது நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படுத்திவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியலில் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் பெண்களாகிய நாங்கள் அவருக்கு உறுதுணையாக நின்று கை கொடுத்தோம்.
ஆனால், இன்று என்னை மட்டுமின்றி பல பெண் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் சீட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் சார்பிலும் இந்த ஆதங்கத்தை தெரிவிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகாலமாக மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை தொகுதி மக்களக்கு பெற்று தந்துள்ளேன். அப்படி இருந்தும் எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை எனக் கூறி கட்சித் தலைமைக்கு தகவல் அளித்துள்ளனர். இது உண்மைக்கு புறம்பானது.
கிருஷ்ணாராயபுரம் ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் பிற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எனது ஆதங்கத்தை இன்று தெரிவித்து விட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் எனது ஆதரவாளர்களும் கலந்து கொண்டு கருத்து கேட்ட பிறகு எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.