தமிழகத்தில் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் நல்ல செய்தி வெளியாகும் என்று தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பியூஸ் கோயலை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது, விமான நிலையத்திலேயே தமிழக பாஜக தலைவர்களுடன் பியூஸ் கோயல் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததில் மகிழ்ச்சி. இளைஞர்கள், பெண்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். தமிழக மக்கள் மீதும் அவர் அக்கறை வைத்துள்ளார்.
தேர்தலுக்கு பின்பாக அமைய இருக்கும் மத்திய அமைச்சரவையில் தமிழக உறுப்பினர்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று மோடி கவனம் கொண்டுள்ளார். தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்.
கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவானதாக இருக்கும். பிரதமர் மோடியின் கரத்தை அது வலுப்படுத்தும். கூட்டணி குறித்து சரியான நேரத்தில் நல்ல செய்தி வெளியாகும்.
அரசியலில் எல்லாமே சாத்தியம் தான். சில நேரங்களில் கட்சிகளுக்குள் மனஸ்தாபம் வரலாம். பிரதமர் மோடிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நல்ல உறவு இருந்தது. மறைந்த ஜெயலலிதா என்னை சகோதரர் போலவே பாவித்தார்” என்று கூறினார்.