திருச்சி: மாமியார் மற்றும் மனைவியை கொலைசெய்தவர் குழந்தையுடன் தப்பியோட்டம்..!
திருச்சியில் மாமியார் மற்றும் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை தேடி தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்துள்ளனர்.
திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு குழந்தையுடன் தப்பியோடிய கணவன் உலகநாதன் பெரம்பலூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்துள்ளனர். திருச்சி பெரிய மிளகுப்பாறை நாயக்கர் தெருவில் கடந்த ஒரு வருடமாக உலகநாதன் என்பவர் தன் மனைவி பவித்ரா மற்றும் இரண்டு வயது குழந்தை கனிஷ்காவுடன் வசித்து வந்துள்ளார். உலகநாதனின் மாமியாரான கலைச்செல்வி கடந்த சில நாட்களாக உலகநாதன் வீட்டில் தங்கியிருந்தார்.
உலகநாதன் வேலைக்கு செல்லாத நிலையில் அவரது மனைவி பவித்ரா அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் உலகநாதனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை உலகநாதன் தாயார் இந்திராணி உலகநாதனுக்கும் பவித்ராவிற்கும் தொடர்பு கொள்ள போன் செய்துள்ளார், ஆனால் இருவரும் அவருடைய போனை எடுக்கவில்லை, சந்தேகமடைந்த இந்திராணி உலகநாதனின் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து தன் மகன் வீட்டை பார்க்க கூறியுள்ளார், வீட்டின் கதவு பூட்டி இருக்கவே பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பவித்ராவும், அவரது தாயார் கலைச்செல்வியும் இறந்து கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்த அவர்கள் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர், அதன் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இரட்டை கொலை செய்து விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பிய உலக நாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலையின்றி இருந்துவந்த உலகநாதன் நீண்ட நேரமாக செல்போனில் சிலரிடம் பேசி வந்துள்ளார், இதை பவித்ரா தட்டிக்கேட்டபோது இருவருக்குமிடையே அவ்வப்போது சண்டை வந்துள்ளது, அந்த சண்டை காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய உலக நாதனின் செல்போன் எண்ணை ட்ராக் செய்தபோது அவர் கடைசியாக பெரம்பலூரில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவலர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் சென்றுள்ளனர். வழக்கை விசாரித்து வரும் திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் உலகநாதன் மீது 302, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களே ஆனதால் தற்போது ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..