தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா? - ஸ்டாலின், திருமா கண்டனம்

தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா? - ஸ்டாலின், திருமா கண்டனம்
தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா? - ஸ்டாலின், திருமா கண்டனம்
Published on

தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி பிரமாணத்தை மீறி யாகம் நடத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை முதல்வரின் அலுவலகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் யாகம் நடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. துணை முதல்வரின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஸ்டாலின் கூறுகையில், “மக்கள் வரிப்பணத்தில் கோட்டையில் யாகம் நடத்தலாமா?. பதவிப் பிரமாணத்தை மீறி யாகம் செய்துள்ளார். வீட்டிலோ, கோயிலிலோ யாகம் நடத்தினால் அதனைப்பற்றி கவலையில்லை. கோட்டையில் யாகம் நடத்த என்ன உரிமை உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். 

அதேபோல், தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் அலுவலகத்தில் யாகம் நடத்தி இருப்பது மரபு மீறிய செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “துணை முதல்வர் அலுவலகத்தில் யாகம் நடத்தி இருப்பது மரபு மீறிய செயல். சட்டவிரோதமான செயல். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. யாகம் தொடர்பான விளக்கத்தை முதல்வரும், துணை முதல்வரும் மக்களுக்கு அளிக்க வேண்டியது அவர்களுடைய கடைமை” என்று கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு என்பது மதச்சார்பற்றது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் யாகம் நடத்தியிருப்பது குற்றம்” என கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதை யாரேனும் பார்த்தார்களா? யாகம் நடத்தியதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?. ஆதாரம் இல்லாத ஒன்றிற்கு பதில் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com