தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தல் செலவு விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கான பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையர் அலுவலகம், சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம், அமைத்துள்ளது.
ஏதாவது விதிமீறல்களை பொதுமக்கள் கவனித்தால், அவை குறித்து தொலைபேசி அழைப்பு மூலமாகவோ, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடத்தல் பொருட்கள், போதை பொருட்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புடவைகள், சமையல் மற்றும் மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்படுவதை தடுக்கவும், ஆறு பறக்கும் படைகளையும், எட்டு நிலை கண்காணிப்புக் குழுக்களையும் சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம், அமைத்துள்ளது.
இவர்கள் சேமிப்பு கிடங்குகளை கண்காணிப்பதோடு, வாகனங்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், சட்டவிரோத சரக்கு நடமாட்டம் குறித்த தகவல்கள் / புகார்களை 8248134458, 9445232804 & 9841986551 ஆகிய எண்களிலும், gst.chennaiouter@gov.in எனும் மின்னஞ்சலிலும் அளிக்குமாறு செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் ஜெயபாலசுந்தரி தெரிவித்துள்ளார்.