ரயில்வே ஹோட்டல் டெண்டர் முறைகேடு விவகாரத்தில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராப்ரி தேவியின் இல்லத்தில் இந்தச் சோதனை நடைபெற்றது. ரயில்வே ஹோட்டல் டெண்டர் முறைகேடு தொடர்பாக ராப்ரி தேவியின் மகன் தேஜ்வாஸ்வி யாதவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.