அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு

அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு
அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு
Published on

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதயசூரியனும் - கையும் இணைவது புதிதல்ல. இணைந்த கைகளாக இரு கட்சிகளும் சந்தித்த தேர்தல்களைப் பற்றி பார்க்கலாம்.

காங்கிரஸை தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டக் கட்சி திமுக. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தனது இலக்கை திமுக எட்டிப் பிடித்து அரியணை ஏறியது. முதலமைச்சராக பதவியேற்ற அண்ணா உடல்நலக் குறைவால் காலமாக, கருணாநிதி முதல்வரானார்.

1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. காமராசர் தலைமையில் ஓரணியாகவும், இந்திரா காந்தி தலைமையில் மற்றொரு அணியாகவும் காங்கிரஸ் செயல்பட்டது. எந்தக்கட்சி தமிழகத்தில் தங்கள் ஆட்சியை அகற்றுவதற்காக தொடங்கப்பட்டதோ அக்கட்சியுடனே கூட்டணி சேர்ந்தார் இந்திரா. திமுக - காங்கிரஸ் கூட்டணி 1971ல் முதன்முறையாக உதயமானது. ஆனால், இந்திரா காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே திமுகவுடன் கைகோர்த்தது. 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 23 இடங்களில் வெற்றி வாகை சூடியது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ அக்கட்சியின் ஆட்சியையே டிஸ்மிஸ் செய்தார் இந்திரா காந்தி. தமிழகத்தில் நடைபெற்று வந்த திமுக ஆட்சி 1976ஆம் ஆண்டு‌ டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எமர்ஜென்சிக்குப் பிறகு 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காட்சிகள் மாறின. தனது ஆட்சியை டிஸ்மிஸ் செய்த இந்திரா காந்தியை வீழ்த்த ஜனதா கட்சியுடன் கரம்கோர்த்தார் கருணாநிதி. இந்திராவோ எம்.ஜி.ஆர். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று 34 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 14 இடங்கள் கிடைத்தன. எனினும் மத்தியில் இந்திரா காந்தியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஜனதா கட்சியைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் பிரதமரானார். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. அதே 1977 ஆண்டில் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தார் இந்திரா. திமுக தனித்து போட்டியிட்டு 48 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 27 இடங்கள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதலமைச்சரான எம்.ஜி.ஆர். மறையும் வரை முதல்வராகவே இருந்தார்.

காமராசர் மறைவுக்குப்பின் அவர் தலைமையிலான அணி இந்திரா காங்கிரஸுடன் இணைந்தது. இதனால் கூடுதல் பலம் பெற்ற காங்கிரஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது. 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக' என்றார் கருணாநிதி. இந்திராவோ தன் பங்கிற்கு 'கருணாநிதியை நம்பலாம், அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார், எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார்' எனக் கூறினார். 1980ல் நடந்த அந்தத் தேர்தலில் தமிழகத்தில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 20 இடங்களிலும், 16 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 16 இடங்களையும் கைப்பற்றின. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்திரா இரண்டாவது முறையாக பிரதமரானார். விளைவு, கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அவரது அரசு கலைக்கப்பட்டது. 

தமிழகத்தின் மீது சட்டப்பேரவைத் தேர்தல் திணிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி 1980 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. 114 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 31 இடங்களிலும், 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர். மீண்டும் முதலமைச்சரானார்.

1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்தது காங்கிரஸ். தேர்தலில் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமரானார். காலங்கள் கடந்தன. எம்.ஜி.ஆர். மறைவு, அதிமுகவில் பிளவு, திமுக ஆட்சி இரண்டாவது முறையாக கலைப்பு, ராஜீவ் படுகொலை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது என பல நிகழ்வுகள் நடந்தன. 1989 முதல் 2004ஆம் ஆண்டு வரை வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோர் பிரதமர் பதவிக்கு வந்து சென்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் பிரிந்து மீண்டும் சேர்ந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு உதயசூரியனும், கையும் மீண்டும் இணைந்தன. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 40 இடங்களையும் கைப்பற்றிய திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிமுக அணியை தோற்கடித்தது. மத்தியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மன்மோகன் சிங் பிரதமரானார்.

இந்தக் கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு ஆதரவளித்தது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இருகட்சிகளின் நல்லுறவு நீடித்தது. 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 18 இடங்களிலும், 1‌5 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2011ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இணைந்து சந்தித்த இந்தக் கூட்டணியால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக முக்கிய பங்கு வகித்தது. 9 ஆண்டுகள் நீடித்த கூட்டணி, இலங்கைப் பிரச்னையால் முறிந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த திமுகவும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவின.

தனித்து களம் கண்ட அதிமுக 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதன் எதிரொலியாக 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் மீண்டும் கரம்கோர்த்தன. 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களிலும், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், இந்தக் கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. 2016 முதலே திமுகவுடன் இணைந்து செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்கிறது. அதற்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com