வாட்டும் வறுமையிலும்... சளைக்காமல் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் கட்டிட கலைஞர்!

வாட்டும் வறுமையிலும்... சளைக்காமல் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் கட்டிட கலைஞர்!
வாட்டும் வறுமையிலும்... சளைக்காமல் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் கட்டிட கலைஞர்!
Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வறுமையில் வாடினாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக 150க்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கட்டிட கலைஞர் இலவசமாக சிலம்பம் கற்றுத்தருகிறார்.

சாத்தூர் தென்றல் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். கட்டிட வேலை (கொத்தனார்) பார்த்து வரும் இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மேல காந்திநகர், பெரியார் நகர், தில்லை நகர், சிதம்பர நகர், படந்தால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு இலவசமாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாட்டு பயிற்சியை கொடுத்து வருகிறார்.

மேலும் இவரிடம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இலவசமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் இருப்பதால் மாணவ மாணவிகள் அனைவரும் செல்போனில் மூழ்காமல் இவரிடம் சிலம்பம் கற்றுக்கொள்ள மிக ஆர்வமாக வருவது பெற்றோர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழனின் வீரத்தின் அடையாளமான சிலம்பக்கலை தற்போது அழிந்து வரும் சூழ்நிலையில் தங்கபாண்டியன் தன்னிடம் பயிற்சி எடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்பத்தில் உள்ள பல்வேறு வகை ஆட்டங்களான ஒன்றாம் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை, நான்காம் வரிசை, தீப்பந்தம் மற்றும் மான் கொம்பு, சுருள்வாள்வீச்சு வாள்சண்டை, வேல்கம்பு வீச்சு வலரி உள்ளிட்ட பலதரப்பட்ட பயிற்சிகளையும் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் அவர்களிடம் மன தைரியத்தை ஏற்படுத்துவதோடு தன்னம்பிக்கையை உருவாக்கவும் தற்காப்பு கலையான சிலம்பம் பேருதவியாக இருப்பதாக இங்கு பயிற்சி பெறும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிப்பதற்காகவே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை தங்கபாண்டியன் பார்த்து கொள்கிறார். வறுமையில் வாடினாலும் தான் கற்ற சிலம்பக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தங்கபாண்டியனின் எண்ணமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com