நீண்டகாலமாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் பதவி உயர்வும் கிடைக்காமல் சம்பளத்திலும் எந்த ஏற்றமும் இல்லாமல் இருப்பதால் பல ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த சம்பளத்திற்கு செல்வார்கள்.
அப்படி வேறு நிறுவனத்திற்கு சென்றாலும் முந்தைய நிறுவனத்திலிருந்து கிடைக்க வேண்டிய அந்த மாதத்திற்கான சம்பளம் பெரும்பாலும் லீவ், வருகை குறைவு போன்ற காரணங்களை முன்வைத்து குறைக்க முனைவார்கள் அல்லது தாமதமாக வழங்குவார்கள்.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று வேலையை விட்டு செல்வோருக்கு 10 சதவிகிதம் கூடுதலாக சம்பளத்தை போட்டு அனுப்புவதாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கொரில்லா என்ற அந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் ஜான் ஃப்ராங்கோ தனது linkedin பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “வேலையை விட்டு விடைபெறுவதாக ஊழியர் 6 வாரங்களுக்கு முன்பே தெரிவித்தால், அவர் தனது பதவிக்காலத்தில் முழுநேர பணியாளராக இருந்தால் அவருக்கு 10 சதவிகிதம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்.
இதுபோக எங்களுக்கு 3 மாதம் வேலை செய்துகொடுத்துவிட்டு விலகிக்கொள்ளுமாறு சொல்வோம். இந்த மாதிரி செய்வதால் ஊழியர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே மனக்கசப்புகள் நிகழாமல் இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜான் ஃப்ராங்கோவின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.