வயதானவர்களுக்கென்றே பல வீடுகளில் காரம் சாரம் இல்லாத உணவுகள் தயாரிக்கப்படும். கேட்டால் சுகர், பிபி, செரிமானப் பிரச்னை என பல காரணங்கள் சொல்வார்கள். வயதானவர்களுக்கு டேஸ்ட்டாகவும், அதேசமயம் ஆரோக்யமாகவும் உணவுகளைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.
கருத்தில்கொள்ள வேண்டியது மூன்றே மூன்று விஷயங்கள்தான். உடல் இயக்கத்திற்கு ஏற்றவாறு கலோரி அளவு, ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி.
பக்கத்தில் கிடைக்கும் பருவநிலைக்கு ஏற்ற உணவுகள்
நமது ஊரில் கிடைக்கக்கூடிய உணவுகளையே காலநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கவேண்டும். ஒரு இடத்தின் வானிலை, மண் வகை போன்றவற்றுக்கு ஏற்றவாறு வைட்டமின்கள், புரதங்கள் நிறைந்த உணவுகள் கிடைக்கும் உதாரணமாக மலைகள் அருகில் வசிப்பவர்களுக்கு தோட்டங்களில் விளைவிக்கக்கூடிய உணவுகள் கிடைக்கும். அந்த காலநிலைக்கு ஏற்ப உணவில் சத்துகள் நிறைந்திருப்பதால் அவற்றை அளவாக சாப்பிடும்போது பக்கவிளைவுகள் இருக்காது.
அதிக நீராகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
பருவநிலை, இடம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் முதியவர்களை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம். உடலில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலே செரிமான பிரச்னை மற்றும் மலச்சிக்கல் போன்றவை வராது. எனவே தர்பூசணி, முலாம் பழம், பீச் மற்றும் ப்ளம்ஸ் போன்றவற்றைக் கொடுக்கலாம். வெண்டைக்காய், பீன்ஸ் தவிர சுண்டைக்காய், சுரைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் அதிகம் கொடுக்கவேண்டும்.
வறுத்த பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்
நமக்கே தெரியும் வறுத்த உணவுகள் நல்லதல்ல என்று. ஆனால் இது நம் கலாச்சாரத்தில் ஒன்றாகிவிட்டது. ஊட்டச்சத்து மிக்க உணவை கொடுக்கவேண்டும். அதேசமயம் அவர்களுக்கு பிடித்த மாதிரியும் இருக்கவேண்டும். உதாரணமாக பூரியாக பொரிப்பதைவிட ரொட்டியாக சுட்டெடுக்கலாம்.
மாற்றுவழிகளை அறிந்துகொள்ளுங்கள்
வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட வெல்லம், தேன் போன்ற இனிப்புகளுக்கு மாறிக்கொள்ளுங்கள். இது ஆரோக்யத்தை மேம்படுத்தும். இப்போது சிறுதானிய சிப்ஸ் மற்றும் இனிப்புகள் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. அவற்றை தாராளமாகக் கொடுக்கலாம்.
சமச்சீர் உணவு
சீரான கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் தினமும் இடம்பெறவேண்டும். இவை உடலின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
கலர் உணவுகள்
சிவப்பு மற்றும் ஊதா நிற காய்கறிகளில் அந்தோசயின் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால் மூட்டுகளை வலுவாக்கும். பச்சை நிற காய்கறிகள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பார்வைத்திறனை மேம்படுத்தும்.