மோடி பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பு கலாட்டா

மோடி பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பு கலாட்டா
மோடி பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பு கலாட்டா
Published on

நாடாளுமன்ற மக்களவையில் மிகவும் ஆக்ரோசமாக மோடி பேசியது, ‘மோடிக்கு என்ன ஆச்சு..இப்படி வெகுண்டெழுந்து விட்டாரே’ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. உடலை அசைத்து அசைத்து ஒரு அரசியல் பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்வது போல், ஒரு மணி நேரத்திற்கு மேல் காங்கிரஸ் கட்சியை ஒரு கை பார்த்து விட்டார். அந்த அளவுக்கு இருந்தது மோடியின் டாக். 

மக்களவை மோடி பேசிய வேகம் மாநிலங்களவையில் இல்லை. ஒருவேளை மெஜாரிட்டி பிரச்னையாக இருக்குமோ. மாநிலங்களவையில் மோடி பேசிக் கொண்டிருக்கையில், ‘ஆதார் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ஆனால் 1998-ம் ஆண்டு அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போதே ஆதார் அட்டை குறித்து கூறியுள்ளார்’ என்பதை குறிப்பிட்டார்.

மோடியின் இந்தப் பேச்சை கேட்டதும், காங்கிரஸ் எம்.பி. ரேணுக சௌத்ரி வாய் விட்டு சிரித்துவிட்டார். அடக்க முடியாத சிரிப்பு அது. மோடியின் பேச்சை கேட்டு ஏளனமாக சிரித்தது போல் இருந்ததால், பாஜக எம்.பி.க்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சும்மா இருப்பாரா அவை தலைவர் வெங்கையா நாயுடு(பாஜக மூத்த தலைவர் வேறு). ரேணுகா சௌத்ரியை நோக்கி, “ஏன் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறீர்கள். நிறுத்துங்கள்” என்று கூறினார். அதோடு நிறுதாமல், ‘உங்களுக்கு என்ன ஆச்சு?ஏதாவது பிரச்னை என்றால் டாக்டரை சென்று பாருங்கள்’ என்று கூறினார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த மோடி, ரேணுகாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். எப்படி தெரியுமா, “ரேணுகா சௌத்ரி சிரிப்பை நிறுத்த சொல்லாதீர்கள்.. ராமாயண சீரியலுக்கு பிறகு இப்பொழுதுதான் இப்படியொரு சிரிப்பை பார்க்க முடிகிறது” என்று. ராமாயணத்தில் ராணவன் சகோதரி சூர்ப்பணகைதான் சிரிப்புக்கு பெயர் போனவர். மோடியின் இந்த நாசுக்கான பதில் விமர்சனத்தால் குஷியான பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி சிரித்தனர். 

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா, பெண்களின் நிலையை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசிவிட்டதாக குற்றச்சாட்டினார். இந்தப்பேச்சு நாடாளுமன்றத்தோடு நின்றுவிடவில்லை. மோடி, ரேணுகா சௌத்ரிக்கு அளித்த பதில் குறித்த வீடியோவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரெண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதேபோல். சூர்ப்பணகை சிரிப்பது போன்ற வீடியோவையும் பதிவிட்டார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் அரசியலுக்குள் வந்தது. சர்சையை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை எடுத்துவிட்டார். 

தன்னை குறித்து கிண்டலாக வீடியோ பதிவிட்ட கிரெண் ரிஜிஜூக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ரேணுகா சௌத்ரி தெரிவித்தார். அதேபோல், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் சிரித்த ரேணுகாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com