பாரதிய ஜனதா கட்சி 70 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தால் பிளாஸ்டிக் சேர்களுக்கு பதிலாக சில்வர் சேர்களில் அமர்ந்து கொண்டிருப்போம் என்று மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் கர்வாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஹெக்டே இவ்வாறு பேசினார். அந்தக் கூட்டத்தில் ஹெக்டே பேசுகையில், “நாம் பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கிறோம். இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். நாம் 70 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தால் சில்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்போம்” என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர் பேசுகையில், “ஒரு பக்கம் காக்கைகள், குரங்குகள், நரிகள், கழுதைகள் மற்றும் சிலர் இருக்கிறார்கள். மறு பக்கம் புலி பலத்துடன் நாம் இருக்கிறோம். 2019 தேர்தலில் புலியை தேர்வு செய்யுங்கள்” என்று கூறினார். எதிர்க்கட்சிகளை குரங்குகள், கழுதையுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக அமித்ஷா ஒருமுறை பேசும் போது, “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. பெரும் வெள்ளம் வரும் போது தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள பாம்புகள், எலிகள் மற்றும் பூனை ஒரே படகில் ஏறிக் கொள்ளும். ஆனால் மோடி வெள்ளத்தில் எதுவும் தப்பிக்க முடியாது” என்று கூறினார். ஹெக்டேவின் பேச்சு அமித்ஷாவின் இந்தப் பேச்சை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.
ஹெக்டேவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, “புலி காட்டில் இருக்கும். அதனால், அதனை காட்டிற்கே அனுப்பி வைத்துவிட வேண்டும்” என்றார்.