குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அல்பேஷ் தாகூர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 82 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் தலித் இன மக்களுக்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவரான அல்பேஷ் தாகூரும் பாஜக எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இருவருமே முன்னிலை வகித்து வருகின்றனர்.