குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 9-ம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து டிசம்பர் 14-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு, 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. 2.22 கோடி வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதிகளில் 851 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று மாலை 5 மணியுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரச்சாரம் முடிவடைந்தது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பாஜகவுக்கு எதிராக ஹர்திக் படேல் அமைப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மணி சங்கர் ஐயரின் நீச் ஆத்மி, பிரதமர் மோடியின் குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளிட்ட கருத்துகள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு கவுரவப் பிரச்சனையாகும். இது மோடியின் சொந்த மாநிலம். 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த படேல், ஓபிசி மற்றும் தலித் தலைவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.