பந்தக்கால் நடுவது முதல் பந்தி பரிமாறுவது வரை திருமண சடங்குகளில் நடக்காத சண்டைகளே இருக்காது. எந்த சண்டையை வேண்டுமானாலும் பேசி தீர்த்து விடலாம். ஆனால் சாப்பாடு விஷயத்தில் பிரச்னை வந்தால் அவ்வளவுதான் அந்த கல்யாண வீடே அதகளமாகி விடும். வேண்டாதவர்கள் வம்பு செய்ய வேண்டுமானால் அதற்கு சாப்பாடுதான் முக்கியமான முதன்மையான ஆயுதமாக இருக்கும்.
பொதுவாக திரைப்படங்களில்தான் பந்தி பரிமாறுவதில் சண்டை போடும் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஒரு திருமண விழாவில் அப்பளத்திற்காக நடந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகள் முட்டம் பகுதியையும், மணமகன் திருக்குன்றப்புழா பகுதியையும் சேர்ந்தவர்கள். மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
திருமணத்தை பார்த்து முடித்துவிட்டு பந்திக்கு சென்று மாப்பிள்ளையின் நண்பர்கள் சாப்பிட சென்றிருக்கிறார்கள். அங்கு, சாப்பாட்டிற்கு கூடுதலாக அப்பளம் வேண்டும் என நண்பர்கள் குழுவில் இருந்த ஒருவர் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் கேட்ட அப்பளம் கொடுக்காமல் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் எங்களுக்கே அப்பளம் இல்லையா எனக் கேள்வி கேட்டதும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. இதனையடுத்து மணமகனின் உறவினர்கள் சாப்பிடும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வாய் வார்த்தையாக இருந்த தகராறு கை கலப்பாக உருமாறியிருக்கிறது. இதனால் மண்டப ஊழியர்கள், மாப்பிள்ளையின் நண்பர்கள் இடையேயான சண்டை கோஷ்டி மோதலாகியிருக்கிறது. இதில் மண்டப ஊழியர்கள் மூவருக்கு படுகாயம் ஏற்படவே அங்கிருந்த விருந்தினர்கள் பலரும் தலைதெறித்து ஓடியிருக்கிறார்கள்.
அப்பளத்துக்காக நடந்த சண்டை குறித்து மண்டப உரிமையாளர் முரளிதரன் அளித்த புகாரின் பேரில் ஆலப்புழா போலீசார் திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் விலக்கியதோடு, தகராறில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.