ஆளுநரின் ஆய்வை ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துகொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆய்வு நடத்தினாலும், அது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் கோவையில் ஆய்வு செய்ததும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநரின் ஆய்வால் எந்த பிரச்னையும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா இருக்கும்போது ஆய்வு நடத்தியிருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இதில் மாநில உரிமை எங்கு இருக்கிறது. கோவையை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ளதால் மத்திய அரசின் திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கிறார்கள். இதில் எந்த பிரச்னையும் இல்லை. ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றும் இல்லை” என தெரிவித்தார்.