ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் கடந்த 22 ஆம் தேதி நிறைவேறியது. ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகளுடன் ஆதரவால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறும் கூட்டம் திடீரென மறைந்து போனது விந்தையாக உள்ளதாக கூறியுள்ளார்.