போட்டி நிறுவனங்களை கேலி செய்வதென முடிவெடுத்துவிட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம். அதுவும் அவர்களது தயாரிப்பை கிண்டலடிப்பதென்றால் வெறும் வாயில் அவல் உண்பதற்கு சமம். அப்படிதான் உலகின் மிகப்பெரிய தேடுபொறியான (search engine) கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்து பதிவிட்டது. ஆனால் இறுதியில் அது கூகுள் நிறுவனத்துக்கே பாதகமாகிவிட்டது. எப்படி தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய M2 ஐபேட் ப்ரோ, ஐபேட் 10, next gen ஆப்பிள் டிவி 4k ஆகியவற்றை வெளியிடவுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான டிம் குக்கின் ட்விட்டர் பக்கத்தில் #TakeNote என்ற ஹேஷ்டேக் கீழ்
தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு கூகுளின் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பான கூகுள் பிக்சல் தரப்பில் இருந்து கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் போடப்பட்டிருக்கிறது. அதில், ”NBA பாஸ்கட் பால் ரசிகர்களே... #TeamPixel மூலம் உங்களுக்கு பிடித்த அணியை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.” எனக் குறிப்பிட்டதோடு அந்த ட்வீட்டை ஐஃபோனில் இருந்தே போஸ்ட் செய்திருக்கிறது.
இது தொடர்பான ஸ்கீரின்ஷாட்தான் தற்போது நெட்டிசன்களால் குறிப்பிடப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட கூகுள் பிக்சல் நிறுவனம் ஐஃபோனில் இருந்து போட்ட ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு twitter web app-ல் இருந்து மீண்டும் பதிவிட்டிருக்கிறது.