வாணியம்பாடி சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை என அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவைத் உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமாக நிலோபர் கபில் இருந்து வந்தார். இந்நிலையில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு மீண்டும் சீட்டு வழங்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நிர்வாகிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாணியம்பாடியில் வாக்களிக்கவில்லை என்பதற்காக தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜெயலலிதாவால் அமைச்சராக்கப்பட்டவர் நிலோபர் கபில். வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம் மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தவறான தகவலை வெளியிட்டு செந்தில் குமாருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கொடுத்து இந்த சீட்டை பெற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
நாங்கள் உடனடியாக ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து முடிவு எடுக்க உள்ளோம். மறுபரிசீலனை செய்து சீட்டு வழங்காவிட்டால் வாக்களிக்க போவதில்லை என்று தெரிவித்தனர்.