தடபுடலாக திருமண வேலைகளெல்லாம் செய்து முடித்து கல்யாண சடங்குகளின் கடைசி கட்டத்தை எட்டும் போது திடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவத்தால் அந்த திருமணம் தடைபடும். அதுவும் அண்மைக் காலமாக மணக்கோலத்தில் இருக்கும் மணமக்கள் பலரும் திருமணம் செய்துக் கொள்ளும் நேரத்தில் அதனை நிறுத்துவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்படியான சம்பவம் குறித்த செய்திகள், வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்கள் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் பகுதியில் நிறுத்தப்பட்ட திருமணம் குறித்த வீடியோதான் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடு ரோட்டில் மணப்பெண்ணிடம் மணமகன் ஆவேசமாக பேசுவதும் அந்த பெண் கெஞ்சுவதும் போல காட்சி இருக்கிறது.
இதன் பின்னணியாக, பெயர் அறியப்படாத அந்த மணப்பெண் திருமணம் ஆவதற்கு முன்பு தன்னுடைய முன்னாள் காதலனை சந்தித்திருப்பதை அந்த மணமகனின் காதுக்கு எட்டியிருக்கிறது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான அவர் எந்த மறுபரிசீலனைக்கும் உட்படாமல் தடாலடியாக நடக்கவிருந்த திருமணத்தை உடனே நிறுத்தியிருக்கிறார்.
இதனால் வருத்தமடைந்த அப்பெண் அந்த மணமகனிடம் நடு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப்புரண்டு கெஞ்சுயிருக்கிறார். ஆனால் அந்த நபர் ஒப்புக்கொள்ள மறுத்து சென்றிருக்கிறார். முன்னாள் காதலனை அந்த பெண் சந்தித்தார் என்பதை பெண்ணின் தோழிதான் மணமகனிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.