சமையல் எரிவாயு மானிய விவகாரம் - தலைவர்கள் கண்டனம்
பொது விநியோக திட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளதும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதும் ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பப் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக இதைக் கருத வேண்டியிருக்கிறது எனக் கூறியுள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வங்கியின் உத்தரவை ஏற்று பொது விநியோகத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, தான் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது அரசின் கடமை என்றும் அதிலிருந்து விலகக் கூடாது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக அனைத்து தரப்பினரும் இணைந்து போராட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பட்டினிச் சாவுகளுக்கு வழிவகுக்கும் இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மானியம் ரத்து செய்யும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளர்.
மத்திய அரசின் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.