1. தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நிறைவடைய ஒருவாரமே உள்ள நிலையில் தலைவர்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கின்றனர். நாளை பிரதமர் மோடி தாராபுரம் வருகிறார்.
2. குறை கூறி, குழப்பங்களை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி செய்வதாகவும், ஓ பன்னீர்செல்வம் இறைவன் கொடுத்த கொடை எனவும் பொடிநாயக்கனூரில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் கூறினார்.
3. பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக மாறிவிட்டதாக சென்னையில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
4. திருத்தணியில் 4ஆவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
5. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல், 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை எப்படி அறிவித்தார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை செல்வபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இட ஒதுக்கீடு அறிவித்திருப்பது காசோலை பவுன்ஸ் ஆனதுக்கு சமம் என்றும் கூறினார்.
6. முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது, அதிமுக. இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக தன்னிலை விளக்கத்தையும் அளித்திருக்கிறார், ஆ.ராசா.
7. அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை பானைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் அமைச்சர் எம்.சி சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான கல்லூரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
8. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது. கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
9. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அசாமில் 77 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிபோட்டி இது.