கேரளாவில் ராகுல் காந்தி எம்.பி.யாக இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நான்கு காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) செயலாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மஹிலா காங்கிரஸ் மாநில செயலாளர் சுஜய வேணுகோபால், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த பி.கே.அனில்குமார், கே.பி.சி.சி உறுப்பினர் கே.கே.ஸ்விவநாதன் ஆகியோர்தான் கட்சியை விட்டு வெளியேறியவர்கள்.
இந்த நால்வருமே ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாக அறியப்பட்டவர்கள். இவர்கள் கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ராஜினாமா செய்த தலைவர்களில் இருவர் - எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் சுஜய வேணுகோபால் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது குறித்து சூசகமாக தெரிவித்தனர்.
கட்சியில் இருந்து ராஜினாமா செய்த இந்த நால்வரும், மாவட்டக் காங்கிரஸ் குழுவில், கட்சி மேலிடத்தால் தங்களுக்கு உரிய முக்கியவத்துவம் தரப்படவில்லை என்று கடுமையாக சாடியுள்ளனர். காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்த எம்.எஸ். விஸ்வநாதன் வயநாட்டில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, ``வயநாட்டில் மாவட்ட காங்கிரஸ் தலைமை தோல்வி கண்டுவிட்டது. மாநிலத்தில் நடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் எனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை" என்றார். இந்த விஸ்வநாதன் தற்போது சுல்தான் பாதரி நகராட்சியில் கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில் ராஜினாமா செய்த வயநாட்டின் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் கே.கே.விஸ்வநாதனும் வயநாடு காங்கிரஸை கடுமையாக சாடினார். ``வயநாடு காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களால் கட்சி முடிவுகள் ஒருங்கிணைந்து எடுக்கப்படுவது இல்லை. எல்லாம் தன்னிச்சையாகத்தான் நடக்கிறது. ரமேஷ் சென்னிதாலாவின் ஐஸ்வர்ய கேரள யாத்திரையின்போது, வயநாடு மாவட்டம்தான் ஒரு மோசமான திருப்பத்தைக் காட்டியது. மற்ற மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் யாத்திரையில் கூடினர். ஆனால், இங்கு அப்படியில்லை. தேர்தலில் போட்டியிடும் இடங்களை வழங்குவதில் சமூக நீதியை உறுதிப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
இடங்கள் ஒதுக்கப்படுவதில், குருமா சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனது சமூகத்தின் ஆதரவு எனக்கு உள்ளது. நான் முன்பே எனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியிருந்தேன். கட்சியில் நான் இப்படி அவமானப்படுத்தப்பட்ட ஒரு காலமும் இல்லை, அதனால்தான் நான் கட்சியில் தொடரவில்லை" என்றார்.
இதற்கிடையில், சுஜய வேணுகோபால் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி, சமீபத்தில், வயநாட்டின் கல்பேட்டாவில் நடைபெற்ற சிபிஎம் அணிவகுப்பிலும் பங்கேற்றார். வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வு காண கட்சியால் நியமிக்கப்பட்ட கேபிசிசி பொதுச் செயலாளர் கே.பி.அனில் குமார் உள்ளிட்டோர் வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ``அவர்களை மீண்டும் கொண்டுவருவதற்கு கட்சி ஒரு தீர்வை எதிர்பார்க்கிறது. ராஜினாமாக்கள் சில காலமாக கட்சியில் அதிருப்தி ஏற்படுவதன் வீழ்ச்சியாகும். இணக்க முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று அனில் குமார் கூறியிருக்கிறார்.
வயநாட்டில் மட்டும் இப்படி காங்கிரஸ் கட்சிக்குள் சிக்கல் இருக்கவில்லை. பாலக்காடு பகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன. முன்னாள் டி.சி.சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஏ.வி கோபிநாத், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், தற்போதைய பாலக்காடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஷாஃபி பரம்பிலுக்கு எதிராக போட்டியிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் சீட் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகள் வந்துள்ளன. கேரளாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸுக்கு ஏற்பட்ட இந்த சிக்கல் ஓர் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.